எண்ணெய்க் குளியல்

https://www.youtube.com/watch?v=Fwwb8dkybR0

https://www.youtube.com/watch?v=b49vYXEhC4w

https://www.youtube.com/watch?v=JzDIFMgwaL4&t=11s

https://www.youtube.com/watch?v=Tb1LJW8qm5M

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி அவசியமோ, அதேபோல முறைப்படிக் குளிப்பதும் அவசியமானது. உதாரணமாக, எண்ணெயைத் தலையில் தேய்த்ததும் உடனடியாக ஷாம்பூவால் தலையை அலசுவது என்பது எண்ணெய்க் குளியலே அல்ல. அதற்கென ஒரு சில வரையறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே முழுப் பலனை அடையமுடியும்.

எண்ணெய்க் குளியல்’ என்றதும் தீபாவளிப் பண்டிகைதான் நம் நினைவுக்கு வரும். ஆண்டுக்கு ஒரு முறை செய்யவேண்டிய குளியல் அல்ல இது. ‘வாரம் ஒரு முறை பின்பற்றவேண்டிய முக்கிய வாழ்க்கை நெறி’ என்கிறது சித்த மருத்துவம். நம் பாரம்பர்ய வாழ்வியலில் ஓர் அங்கமாகவே இருந்துவந்த இந்த வழக்கம், இன்றைக்கு வெறும் தீபாவளிச் சடங்காக மாறிவிட்டது. உடலை நோய் அணுகாமல் காத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பின்பற்றிவந்த குளியல் முறையில் எண்ணெய்க் குளியல் இன்றைக்கு வழக்கொழிந்துவிட்டது. நம் முன்னோர், நோய் உடலை அண்டாமல் காக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய வழிகளைப் பின்பற்றினார்கள். அவற்றில் எண்ணெய்க் குளியலுக்கு முக்கியப் பங்கு உண்டு.

எண்ணெய்க் குளியலின் பயன்கள்

‘வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு’ என்பது பழமொழி. ‘நோய் வந்து வைத்தியரிடம் சென்று செலவு செய்வதைவிட எண்ணெய்ப் பொருள்களைத் தயாரிக்கும் வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கிக் குளித்து வந்தால் நோய்கள் அண்டாது’ என்னும் பொருள்பட சொல்லப்பட்டது. எண்ணெய், தட்பவெப்ப நிலைக்கேற்ப உடல் சூட்டைப் பராமரிக்கும். உடல் சோர்வு நீக்கி நிம்மதியான உறக்கம் தரும்; சிரங்கு, புண் போன்ற சருமம் தொடர்பான நோய்களை நீக்கும்; எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், உடலிலுள்ள நச்சுகள் வெளியேறி உடல் நாற்றம் விலகும். சருமத்திலுள்ள ஈரத் தன்மையைப் பராமரித்து முகமும் உடலும் பொலிவுபெறச் செய்வதுடன் இளமையையும் தக்கவைத்துக்கொள்ள உதவும்.

நோய் எதிர்ப்பாற்றலையும் மெய், வாய், கண், செவி, நாசி ஆகிய ஐம்புலன்களின் செயல்பாட்டையும் அதிகரிக்கும். உடலில் பித்தம் அதிகமாவதால் ஏற்படும் `குருதி அழல்’ எனப்படும் உயர் ரத்த அழுத்தம், மூலச்சூட்டினால் உண்டாகும் உடல் உபாதைகள், மனநிலையில் சமநிலையின்மை போன்றவற்றிலிருந்து காக்கும். ‘காளஞ்சகப்பட’ போன்ற சரும நோய்கள் வராமல் தடுக்கும். இப்படியாக, எண்ணெய்க் குளியலால் பெறக்கூடிய பலன்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நவீன அறிவியல் ஆராய்ச்சிகளும் இவற்றை உறுதிசெய்கின்றன. 

`வீறு சதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம்...’ என்று தேரையர் தன் ‘நோயணுகா விதி’ நூலில் சூளுரைக்கிறார். `சதுர்’ என்றால் `நான்கு’ என்று பொருள். நான்கு நாள்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது அந்தப் பாடலில் வலியுறுத்தப்படுகிறது. அதேபோல, `நாள் இரண்டு, வாரம் இரண்டு’ என்பது சித்தர்கள் வாக்கு. ஒரு நாளைக்கு இரு முறை மலம் கழித்தல்; வாரத்துக்கு இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்தல் வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. எண்ணெய்க் குளியலை ‘நெய் முழுக்கு’, ‘எண்ணெய் முழுக்கு’ எனப் பல்வேறு பெயர்களில் சித்தர்கள் வலியுறுத்தினர். முக்கியமான விழாக்கள், விரத நாள்கள் மற்றும் பல்வேறு முக்கியமான சடங்குகளிலும் `எண்ணெய்க் குளியல்’ வழக்கத்தில் இருந்திருக்கிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி அவசியமோ, அதேபோல முறைப்படிக் குளிப்பதும் அவசியமானது. உதாரணமாக, எண்ணெயைத் தலையில் தேய்த்ததும் உடனடியாக ஷாம்பூவால் தலையை அலசுவது என்பது எண்ணெய்க் குளியலே அல்ல. அதற்கென ஒரு சில வரையறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே முழுப் பலனை அடையமுடியும்.

முதலில் உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால்வரை எண்ணெய் தேய்க்க வேண்டும். குறிப்பாக நவ துவாரங்களான கண், மூக்கு, காது, வாய், தொப்புள், ஆசனவாய் போன்ற இடங்களில் எண்ணெய்விட்டு சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். குறிப்பாக, உடல் உறுப்புகள், மூட்டுகள் இருக்கும் இடங்களில் சற்று பொறுமையாக வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். இது மூட்டுகளுக்கு நெய்ப்புத் தன்மையைக் கொடுக்கும். 10 முதல் 20 நிமிடங்கள்வரை உடலில் எண்ணெய் ஊறியதும் குளிக்கலாம். 

குளிப்பதற்கு வெந்நீரும், தேய்ப்பதற்குச் சீயக்காய் சேர்த்த பொடியும் பயன்படுத்தலாம். குளித்ததும், தலை மற்றும் உடலை நன்றாக உலர்த்த வேண்டியது அவசியம். எண்ணெயை முழுமையாகத் தேய்த்துக் குளிக்காவிட்டாலும் உச்சந்தலை, உள்ளங்கால், தொப்புள் ஆகிய மூன்று இடங்களிலாவது தேய்த்துக் குளிக்கலாம்.

`எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்’ - நோயணுகா விதிகள் பற்றி தேரையர் எழுதிய புத்தகத்தில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. அதாவது, நல்ல எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம் என்பதே. எனவே, எண்ணெய் தேய்த்த பிறகு மிதமான சூடுள்ள வெந்நீரில் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள்களாகச் சில நாள்கள் சொல்லப்படுகின்றன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.

எந்த எண்ணெய் நல்லது?

நம் ஊரில், நம் தட்பவெப்பநிலையில் விளையக்கூடிய எள் எண்ணெயைத்தான் ‘நல்லெண்ணெய்’ என்று குறிப்பிடுகிறார்கள். `தைலம்’ என்றால் வடமொழியில் `எண்ணெய்’ என்று பொருள். மூட்டுவலி, உடல்வலி உள்ளவர்கள் மிதமான சூட்டில் தினமும் நல்லெண்ணெயைத் தடவினால் வலி குறைவதுடன், மூட்டுகள் பலப்படவும் உதவும். பாரம்பர்ய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் நல்லெண்ணெய் முக்கியமான மூலப்பொருளாக இருக்கிறது.

அதேபோல அதிக உடல் சூடு, மூலம், மலச்சிக்கல் சார்ந்த பிரச்சினைகளுக்கு விளக்கெண்ணெய் தடவிக் குளிப்பது நல்ல பலன் தரும். வறண்ட சருமம், சிறு புண்கள் போன்றவற்றுக்குத் தேங்காய் எண்ணெய் நல்ல பலன் தரும். மேலும் பல்வேறு மருத்துவத்தில் தேங்காய் எண்ணெய் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவர் ஆலோசனையுடன் நம் உடலுக்கு நலம் தரும் எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.

`எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், சளி பிடித்துவிடும், காய்ச்சல் வந்துவிடும்’ என்றெல்லாம் அச்சம்கொள்கிறார்கள். நீண்ட நாள்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய்க் குளியல் செய்யாதவர்கள் எண்ணெய்க் குளியல் செய்ய விரும்பும்போது ஆரம்பத்தில் இது போன்ற அறிகுறிகள் தோன்றலாம்; அதற்காக பயப்படத் தேவையில்லை.

ஆனால், அதற்கும் வழிமுறைகளைத் தந்திருக்கிறார்கள் சித்தர்கள். அதாவது, நல்லெண்ணெயை ஒரு கரண்டியில் எடுத்து லேசாகச் சூடாக்கி அதனுடன் அரை டீஸ்பூன் புழுங்கலரிசி, வெள்ளைப்பூண்டு 2 பல், மிளகு 4, சிறிதளவு சீரகம் சேர்த்தால் பொரிந்துவிடும். அதன் பிறகு அந்த எண்ணெயை உடல் முழுவதும் கதகதப்பாகத் தேய்க்கலாம். இதனால் சளி, காய்ச்சல் தொந்தரவு வராது.

எண்ணெய்க் குளியலை முறையாகப் பின்பற்றினால், அதற்கு உடல் பழகிவிடுவதுடன் உடல் தொந்தரவுகளும் விலகிவிடும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குளிப்பதற்கும் தைலங்கள் இருக்கின்றன. உடல் சூடானவர்களுக்கு சந்தனாதித் தைலம் மற்றும் சீரகத் தைலம், கபாலத்தில் நீர் கோத்திருந்தால் சுக்குத் தைலம், அரக்குத் தைலம் எனக் குளியலுக்கென ஏராளமான தைலங்களை சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘தைல வர்க்கம் சுருக்கம்’ என்று தேரையர் எழுதிய தனிப் புத்தகமே இருக்கிறது.

எண்ணெய்க் குளியல் நாளன்று தவிர்க்கவேண்டியவை!

எண்ணெய்க் குளியல் செய்யும் நாளில் உடல் இயக்கத்துக்கு நல்ல ஓய்வு தேவை. உடல் சூடு தணிந்திருக்கும் வேளையில் தயிர், பால், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழம், குளிர்ந்த பானங்கள் போன்ற குளிர்ச்சி உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் மாமிசம், மது, புகையைத் தவிர்க்கவேண்டியது அவசியம். எளிதில் செரிமானமாகும் அரிசி உணவுகளையே அன்றைய தினம் சாப்பிட வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று பகல் தூக்கம் கூடாது. மிளகு ரசம் அருந்தலாம்.

இன்றைய நவீன வாழ்க்கைச்சூழல், வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நம்மில் பலருக்கு பித்தமும் உடல் சூடும் அதிகரித்துக் காணப்படுகிறது. அதற்கு முறையான எண்ணெய்க் குளியல் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எனவே, சித்த மருத்துவத்தின் கால ஒழுக்கத்தின் ஒரு முக்கியக் கடமையான எண்ணெய்க் குளியலை வழக்கமாக்கிக்கொள்வோம். எண்ணெய்க் குளியலை மீட்டெடுப்போம்... நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்.

Comments

Popular posts from this blog

தீபாவளி பலஹாரங்கள் Deepavali snacks

ஆதித்தியன் சூரியன் Sun Solar

60s, 70s and 80s Brain skill